அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : நீதிபதி எஸ். அல்லி பிறப்பித்த தீர்ப்பு விவரம்..!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு :  நீதிபதி எஸ். அல்லி பிறப்பித்த தீர்ப்பு விவரம்..!
Published on
Updated on
1 min read

ஜூன் 14-ல் கைதான போது ஜாமின் கேட்டு ஏற்கனவே  தாக்கல் செய்த மனு, ஜூன் 16ல் இதே நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. 

அமலாக்கத் துறை விசாரணை முடிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதை தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை என நீதிமன்றம் கருதுகிறது.

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டம் பிரிவு 45 படி, கைது செய்யப்பட்டவர் ஜாமின் கோரி வழக்கு தொடர்ந்தால், முதலில் அமலாக்கத்துறை தரப்பு வாதத்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இரண்டாவது, கைது செய்யப்பட்டவர் குற்றம் புரியவில்லை என்பதையும்  ஜாமினில் வெளியே வந்தால் மீண்டும் குற்றம் புரிய மாட்டார் என்பதையும் நீதிமன்றம் ஏற்க வேண்டும்.

ஆனால், பிரதான வழக்கு விசாரணையின் போது தான் செந்தில் பாலாஜி குற்றம் புரிந்தாரா? இல்லையா? என்பது தெரிய வரும் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளதால், செந்தில் பாலாஜி குற்றம் புரியவில்லை என்பது இந்த சூழலில் நிரூபிக்கப்படவில்லை.

செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.,வாகவும், தமிழக அரசின் தற்போதைய அமைச்சராகவும் உள்ளார். ஏற்கனவே போக்குவரத்து, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் போன்ற முக்கிய துறைகளை வகித்துள்ளார்.

செல்வாக்கு மிக்கவர் என்பதால், சாட்சிகளை கலைக்கவோ, ஆவணங்களை திருத்தவோ வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில், ஜாமின் வழங்க, அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மனுதாரருக்கு எதிராக உள்ள ஆதாரங்கள் மற்றும் குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டும், மனுதாரர் குற்றத்தில் ஈடுபடவில்லை என்றோ அல்லது ஜாமினில் விடுவிக்கப்படும் போது, அவர் எந்த குற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என்றோ நம்புவதற்கு, நீதிமன்றம் போதிய காரணங்களை கண்டறியவில்லை.

எனவே, தகுதி மற்றும் மருத்துவ காரணங்களுக்காக, மனுதாரருக்கு ஜாமின் வழங்க முடியாது. செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com