அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எம் எல் ஏ, எம் பி கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அவர் மீதான குற்றப்பத்திரிகையை வழங்கியுள்ளது.
கடந்த ஜீன் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை நடத்த கடந்த 7 ஆம் தேதி நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி 12 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து நாட்கள் விசாரணை நடத்தினர்.
பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய அமலாக்கத்துறை அவர் மீதான குற்றச்சாட்டுகளை அடங்கிய 3000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு அமர்வு நீதிமன்றத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இன்று புழல் சிறையில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி அமர்வின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 15ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரியதற்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாட சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும், ஜாமீன் மனு தாக்கல் செய்தாலும் தான் விசாரிக்க முடியாது என சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் பரணிகுமார், ஜாமீன் கோரிய வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி உள்ளனர். அமைச்சரின் உடல் நிலை சார்ந்த கேள்வி தான் கேட்கப்பட்டது. தனக்கு கால் மரத்து போகும் பிரச்சினை இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அவருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் அளிக்கப்பட்டுள்ளது, பக்கங்கள் குறித்து தெரியவில்லை என்றார். மேலும், ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து ஜாமீன் அளிக்க முடியாது அதனால் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி உள்ளது எனவும் தெரிவித்தார்.