சென்னை கண்ணகி நகரில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில் சித்த மருத்துவ முகாம் இன்று துவங்கியது. தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனர் டாக்டர் மீனாகுமாரி மருத்துவ முகாமை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
சென்னை கண்ணகி நகர் பகுதியில் முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கத்தில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வழிகாட்டுதலின்படி முதல் தலைமுறை அறக்கட்டளை சார்பில் இன்று துவங்கிய இந்த சித்த மருத்துவ முகாம் மாதத்தில் 2 முறை அதாவது 2-வது சனிக்கிழமை, 4-வது சனிக்கிழமைகளில் தொடர்ந்து கண்ணகி நகரில் நடைபெறும் என்று தெரிவித்தனர்.
நோயில்லா கண்ணகி நகரை உருவாக்கவே தொடர்ந்து மாதத்தில் 2 முறை சித்த மருத்துவ முகாம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். பொதுமக்களுக்கு முறையாக சித்த மருத்துவ முகாம் நடைபெறுவதை துண்டு பிரசுரங்கள் மூலம் தெரிவிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
கண்ணகி நகர் பகுதியில் இதுவரை 181 முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கியுள்ளனர். அதேபோல் நிலவொளி கல்வி, இடைநீற்றல் கல்வி மற்றும் அழகு நிலையம் பயிற்சி, பெண்களுக்கு ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இலவசமாக வழங்கி பெண்களின் வாழ்க்கையில் ஒளிவீசி வருகின்றனர்.
இதில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் நிர்மல்ராஜ், காவல் ஆய்வாளர் முருகன், முதல் தலைமுறை அறக்கட்டளை நிறுவனர் மாரிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.