இன்று மாலை உருவாகும் மாண்டஸ் புயல்...! தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை...!

இன்று மாலை உருவாகும் மாண்டஸ் புயல்...! தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை...!
Published on
Updated on
1 min read

தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய பகுதியில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை மாண்டஸ் புயலாக உருவாக இருக்கிறது. இதனையடுத்து 7,8,9,10 ஆகிய தேதிகளில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக 
நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு தேசிய பேரிடர் மீட்பு குழு ஆய்வாளர் சந்தீப் குமார் தலைமையில் 36 பேர் கொண்ட குழுவினர் சென்னை அடையாறில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளனர். 

படகுகள், மரம் வெட்டும் சாதனங்கள், கயிறு உள்ளிட்ட மீட்புக் பணிக்கு தேவையான அனைத்து பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தகவல் சொன்னவுடன் 10 நிமிடத்தில் அங்கு செல்ல தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். 

அதேபோல் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் 169 நிவாரண மையங்களும், தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற 805 நீர் இறைப்பான்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர 121 பன்னோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com