தொழிலாளர் சட்டங்களும் ஆபத்தானவை... தொல்.திருமாவளவன் பேட்டி...

மத்திய வேளாண் சட்டங்கள் எவ்வளவு ஆபத்தானதோ அதே அளவு ஆபத்தானது மத்திய தொழிலாளர் சட்டங்கள் இதனை தமிழக அரசின் கவனத்திற்கு நிச்சயம் எடுத்துச் செல்வோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
தொழிலாளர் சட்டங்களும் ஆபத்தானவை... தொல்.திருமாவளவன் பேட்டி...
Published on
Updated on
1 min read

மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன்  அசோக் நகர் அம்பேத்கர் திடலில் கருப்புக்கொடி ஏந்தி தனது கட்சிப் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்

இன்று காலை முதல் தமிழ்நாடு முழுவதும் திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய சட்டங்களை எதிர்த்து பெட்ரோல் டீசல் விலை வாசி உயர்வை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தனது கட்சி தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், சோனியா அம்மையாரின் காணொளி கலந்தாய்விற்கு  பிறகு விலைவாசி உயர்வு, மத்திய சட்டங்கள் எதிர்ப்பு ஆகிய நோக்கங்களுடன் 20 ஆம் தேதி முதல் பல்வேறு இடங்களில் போராட்டம் துவங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்றின் காரணமாக, ஆயிரக்கணக்கானோரை திரட்டி போராடாமல் கட்சி அலுவலகங்கள் மற்றும் வீடுகளிலிருந்தே கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபையில் மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் இயற்றியது போல ஏன் மத்திய தொழிலாளர் துறை புதிய சட்டங்களை தமிழக அரசு எதிர்க்கவில்லை என்று பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன்,
மத்திய வேளாண் திட்டங்கள் எதிர்க்க என்னென்ன காரணங்கள் உண்டு அதே காரணங்கள் தொழிலாளர்கள் புதிய சட்டங்கள் எதிர்க்கவும் உள்ளது இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக தமிழக அரசிற்கு நிச்சயம் எடுத்துச் செல்வோம் என்று தெரிவித்தார்.

பெட்ரோல் டீசல் விலை வாசி ஜிஎஸ்டி கொண்டு வருவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்படி அணுகுகிறது என்பது குறித்து செய்தியாளர்  எழுப்பிய கேள்விக்கு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கூடாது. மாநில உரிமைகளை பறிக்கும் தாதாயிஸத்தை எதிர்க்கிறது. தமிழகத்திற்கு வரவேண்டிய பல்லாயிரம் கோடி இன்னும் வந்த பாடில்லை. அதனாலேயே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கொள்கை அடிப்படையில் ஜிஎஸ்டி வரி விதிப்பை எக்காரணம் கொண்டும் ஏற்கக் கூடாது என்று தெரிவித்தார்.

நீட் தேர்வு தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், நீட் கூடாது என்பதுதான் நிலைப்பாடு ஆனாலும் அதை கொண்டுவர ஒரு வழிமுறை இருக்கிறது. அதன்படி தான் தமிழக அரசு சட்டசபையில் மசோதா இயற்றியது அது சட்டம் ஆவது என்பது குடியரசுத் தலைவரின் ஒப்புதலிலேயே உள்ளது ஒருவேளை அவர் ஒப்புதல் தர வில்லை என்றால் நிச்சயமாக போராட்டங்கள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com