தென்காசியில் காதல் திருமணம் செய்த விவகாரத்தில் கடத்தப்பட்ட பெண் பெற்றோருடன் செல்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
தென்காசி அருகே உள்ள கொட்டாகுளத்தை சேர்ந்த வினித்தும், குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டு அதே பகுதியில் வசித்து வரும் கிருத்திகா பட்டேல் என்பவரும் சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி நாகர்கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால், திருமணம் முடிந்து வினித்துடன் இருந்த கிருத்திகாவை அவரது பெற்றோர் காரில் கடத்தி சென்றனர். பின்னர் இது தொடர்பாக குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த வினித், தன் மனைவி கிருத்திகா பட்டேலை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்திருந்தார். புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, கடந்த 7ஆம் தேதி கிருத்திகா பட்டேல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது பெண்ணின் பாதுகாப்பு கருதி தென்காசியில் உள்ள காப்பகத்தில் மூன்று நாட்கள் தங்க வைக்குமாறு உத்தரவிட்டது.
இதையும் படிக்க : வாக்கு சேகரிப்பின் போது...இரட்டை இலை சின்னத்தை காட்டிய குழந்தை...!
இதனைதொடர்ந்து, வினித்தின் மனைவியான் கிருத்திகா பட்டேல் செங்கோட்டை நீதிமன்றத்தில் நீதிபதி சுனில் ராஜா முன்னிலையில் ஆஜராகி, தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். இந்நிலையில் கிருத்திகாவின் வாக்குமூலம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கிருத்திகா பெற்றோருடன் செல்வதாக தெரிவித்துள்ளார். மேலும், அரசு தரப்பில், கிருத்திகாவின் பெற்றோர்கள் தலைமறைவாக உள்ளதாகவும், அதனால் உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள், கிருத்திகாவை அழைத்துச் செல்வதாக அவரது உறவினர்கள் மனு தாக்கல் செய்தால் அதனை காவல்துறையினர் முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், பெண்ணின் பாதுகாப்பு கருதி விசாரணையை நாளை ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.