பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோவை மாவட்ட அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் மீது தடை
இந்தியா முழுவதும் கடந்த வாரம் பிஎஃப்ஐ அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து 11 பேரையும் நாடு முழுவதும் 247 பேரையும் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.
இதனிடையே கோவையின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பு அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் கோவை முழுவதும் பதற்றம் நீடித்தது. இதனிடையே பி.எஃப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது மத்திய அரசு. பி.எஃப்.ஐ-யின் துணை அமைப்புகளுக்கும் இந்த தடை பொருந்தும் என இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது
கோவையில் போலீஸ் குவிப்பு
பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில், கோவை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டவுன்ஹால், உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட கோவையின் முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமை அலுவலகத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் துணை ஆணையாளர் மாதவன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
பெண்கள் போராட்டம்
கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீதான தடையை எதிர்த்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு காவல்துறையினரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.