வனத்துறையினரை ஏமாற்றிய ஆட்கொல்லி புலி... திடீரென்று மாயமானதால் தேடுதல் வேட்டையில் தொய்வு...

மசினகுடி வனப்பகுதியில் இருந்த ஆட்கொல்லி புலி திடீரென மாயமானதால், அதை தேடி சென்ற வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வனத்துறையினரை ஏமாற்றிய ஆட்கொல்லி புலி... திடீரென்று மாயமானதால் தேடுதல் வேட்டையில் தொய்வு...
Published on
Updated on
1 min read

நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஊருக்குள் புகுந்த புலி, கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் 4 பேரை அடித்து கொன்றது. மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தபோது, அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு மசினகுடி பகுதிக்கு புலி இடம்பெயர்ந்தது.இதனையடுத்து, அந்த ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டது.

அதன்படி வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், கேரள வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள், அதிரடி படையினர் என 5 குழுக்களாக பிரிந்து, ஆட்கொல்லி புலியை தேடினர். மாலை 5 மணி வரை தேடுதல் வேட்டை நடத்தியபோதும், புலி எங்கு இருக்கிறது? என தெரியவில்லை.

இதனால் மிகுந்த ஏமாற்றத்துடன் தேடுதல் வேட்டையை நிறுத்திவிட்டு வனப்பகுதியை விட்டு வெளியே வந்த அவர்கள், இரவு நேரங்களில் தனியாக வீட்டைவிட்டு வெளியில் வர கூடாது என்றும், மாடுகளை வனப்பகுதியில் மேய்க்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே  நீலகிரியில் உலா வரும் ஆட்கொல்லி புலியை வேட்டையாட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனையடுத்து, புலியை சுட்டுக் கொல்வது உள்பட அதை வேட்டையாடுவதற்கான உத்தரவை, முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார்நீரஜ் பிறப்பித்துள்ளார்.  இதனை எதிர்த்து உத்தரபிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா, ஆன்லைன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளை பின்பற்றவில்லை எனவும், அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல, புலியை வேட்டையாட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, உயிருடன் பிடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பின் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com