கனியாமூர் பள்ளி மாணவி மரணம் குறித்த வழக்கு...! எச்சரித்த உயர்நீதிமன்றம்...!

கனியாமூர் பள்ளி மாணவி மரணம் குறித்த வழக்கு...! எச்சரித்த உயர்நீதிமன்றம்...!
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை நடத்தக் கோரி தந்தை ராமலிங்கம் வழக்கு தொடந்திருந்தார். மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக ஒப்படைக்கும்படி கடந்த முறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறையின் விசாரணை அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. 4 முறை சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இரண்டு மாதங்களில் காவல்துறையின் விசாரணை முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ராமலிங்கம் தரப்பில், பள்ளி தாளாளர் உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், பிரேத பரிசோதனை வீடியோ பதிவு மற்றும் ஜிப்மர் மருத்துவர்களின் அறிக்கை ஆகியவை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. தனது மகள் செல்போன் வைத்திருக்கவில்லை என்றும், விடுதி வார்டனின் செல்போனிலிருந்தே பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, செல்போனை ஒப்படைப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என்றும், ஒப்படைக்கவில்லை என்றால் விசாரணை எப்படி  நிறைவடையும் என்றும் கேள்வி எழுப்பியதுடன், மாணவி பயன்படுத்திய செல்போன் இருக்கிறதா இல்லையா எனவும் கேள்வி எழுப்பினார். அதுகுறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக மாணவியின் தந்தை தரப்பு வழக்கறிஞர் கூறினார். 

மேலும் ஆதாரம் இருந்தும் அதனை மறைத்தால் சட்டப்படி குற்றம் எனவும் அதற்காக விசாரிக்க நேரிடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து, செல்போன் இருந்தால் உடனடியாக அதனை ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com