கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கின் தன்மை குறித்து உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு கடந்த 29.8.2022 அன்று சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே நிரபராதிகள் எனவும், அவர்கள் அனைவரும் எவ்வித முகாந்திரமுமின்றி கைது செய்யப்பட்டது தேவையற்றது என்றும், மாணவியின் மரணத்தில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமே இல்லை எனவும், அது தற்கொலை தான் எனவும் குறிப்பிட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தக் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆட்சேபணையை தெரிவித்ததுடன், பிணை மனுவினை விசாரிக்கும் போது வழக்கு தொடர்பான தகுதி (மெரிட்ஸ்) குறித்து விவாதிக்கக் கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டியும், முழுமையான விசாரணைக்கு முன்னதாகவே நீதிமன்றம் இம்முடிவுக்கு வந்துள்ளது குற்றவியல் நடைமுறைக்கு எதிரானது என்றும், சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே நீதிமன்றம் இம்முடிவுகளுக்கு வந்திருப்பது அந்த வழக்கின் விசாரணையை சிதைக்கும் என்றும் கருத்து தெரிவித்தது.
அதேசமயம், சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு ஸ்ரீமதியின் பெற்றோரும் கடும் ஆட்சேபனையை தெரிவித்ததுடன், இக்கருத்துகள் வழக்கு விசாரணையை பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்டி, பிணையை ரத்து செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதையும் படிக்க : கடற்படைக் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...போலீசார் விசாரணை!
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துகள் பிணை வழங்கப்படலாமா? வேண்டாமா? என்பது குறித்து மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற நீதிபதி பிணை மனு மீதான விசாரணையில் வழக்கு தொடர்பான தகுதிகள் (மெரிட்ஸ்) குறித்து இந்தளவுக்கு விவாதித்திருப்பது முற்றிலும் அநாவசியமானது என்றும் தனது தீர்ப்பில் கூறியுள்ளனர்.
மேலும் பிணை மனு மீதான விசாரணையின் போது, வழக்கு குறித்து விரிவாக விவாதிக்கூடாது என்பது ஏற்கனவே சட்டரீதியாகத் தெளிவுபடுத்தப்பட்ட விஷயம் என்பதைத் தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம், இந்த வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்த எந்த கருத்துகளையும் பிரதான வழக்கு விசாரணையின்போது விசாரணை நீதிபதி கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கின் தன்மை குறித்து உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான வழக்கினை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர் எந்த அழுத்தத்திற்கும் இடம் கொடுக்க கூடாது எனவும், நேர்மையான முறையில் விசாரணையை நடத்தி குற்றமிழைத்தோருக்கு உரிய தண்டனை வழங்கிட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.