இதற்கு காரணம் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நிறைவுகட்ட மாணவர் சேர்க்கையை அவற்றின் விருப்பம் போல நடத்திக் கொள்ள அரசு அனுமதிப்பதால் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணமும், ரூ. 1 கோடி வரை நன்கொடையும் வழங்கத் தயாராக உள்ளவர்களுக்கு இடம் கிடைக்கிறது. அதேநேரத்தில் 720 மதிப்பெண்களுக்கு 450-க்கும் கூடுதலான மதிப்பெண் பெற்றவர்கள் கூட, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை கட்ட இயலாது என்பதால் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பை இழக்கின்றனர். நீட் தேர்வு நடைமுறைக்கு வரும் வரை ஒரு மாணவர் ரூ. 50 லட்சம் வரை நன்கொடை, ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 6 லட்சம் வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 30 லட்சம் என மொத்தம் ரூ.80 லட்சம் செலவில் தனியார் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் மருத்துவம் படிக்க முடிந்தது. இந்த நிலையை மாற்றி தகுதியானவர்கள் கட்டணமின்றி மருத்துவம் படிக்க முடிந்திருந்தால் அது நீட் தேர்வின் வெற்றியாகும். ஆனால், இரண்டரை கோடி ரூபாய் வரை செலவழிக்கும் வலிமை இருந்தால், போதிய மதிப்பெண் இல்லாவிட்டாலும் கூட மருத்துவம் படிக்க முடியும் என்றால், அது எப்படி மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுப்பதாகும்?