நாடாளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்றத் தேர்தல் வரும்போது பெரும் பான்மையுடன் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், இந்தியா முழுவதும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையை வரவேற்பதாகவும், கடந்த காலங்களில் 1952 தேர்தல் நடைபெற்ற போது நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்த போது சுமார் 11 கோடி மட்டுமே செலவானதாகவும், தற்போது நிலையில் சுமார் 60 ஆயிரம் கோடி தேர்தலுக்காக செலவாகும் என கூறிய அவர், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் கல்வித்துறை பெரிதும் பாதிக்கப்படுவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் போது தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதிலும் பள்ளி கல்வித்துறைக்கும் சிக்கல்கள் ஏற்படுவதாகவும், மேலும் தேர்தல் அடிக்கடி நடைபெறுவதால் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் உள்ளவர்கள் அடிக்கடி ஒவ்வொரு தேர்தலுக்கும் வந்து செல்வதால் அவர்களின் நேரம் விரயமாகும் எனவும், அதே நேரத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் என ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுவதால் அவர்களது பயண சிரமமும் குறைக்கப்படும் என கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்றத் தேர்தல் வரும்போது பெரும் பான்மையுடன் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைக்கும் எனவும், திமுக எப்போதும் பாதியிலேயே மக்களிடம் செல்வாக்கை இழப்பது வாடிக்கையாகி உள்ளது எனவும், அது தற்போது நடந்துள்ளதாகவும், மேலும் மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணியில் இருப்பதாகவும் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் பாஜக கூட்டணி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், "ஓ. பன்னீர் செல்வதால், தெருமுனை கூட்டம் கூட நடத்த முடியாத நிலையில் அவர் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துவார்" என விமர்சித்துள்ளார்.