"4000 கோடிக்கு 400 படகுகளையாவது வாங்கி கொடுத்திருக்கலாம்" ஜெயக்குமார் கேலி!

"4000 கோடிக்கு 400 படகுகளையாவது வாங்கி கொடுத்திருக்கலாம்" ஜெயக்குமார் கேலி!
Published on
Updated on
1 min read

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள திமுக அரசு தவறி விட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். பின்னர் போஜ ராஜா நகர் பகுதியில் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். 
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது பேசிய அவர், "மழைக்கு முன்னெச்சரிக்கை எடுப்பது அரசின் கடமை. வரும் முன் காப்பவன் தான் அறிவாளி. மழை நீர் வடிகால்  அமைக்க வேண்டும். கால்வாய்களை தூர் வார வேண்டும். ஆனால் அரசு இதில் தோல்வி அடைந்துவிட்டது" எனக் கூறியுள்ளார்.

மேலும், விமர்சனங்களை தவிர்க்க பிரதான சாலைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும்,  குடியிருப்பு பகுதிகளை கைவிட்டுவிட்டதாக விமர்சித்தார். குடியிருப்பு பகுதிகளில் மழை நீரில் கழிவு நீர் தேங்கியுள்ளது. அங்கு தேவையான முன்னெச்சரிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும் பேசிய அவர், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொண்டாற்றும் இயக்கம் அதிமுக. ஒரு சொட்டு மழை நீர் கூட தேங்காது என சொன்னார்கள். ஆனால், இன்றைய நிலைமை என்ன? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், "4000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக சொன்னார்கள் அதுவெல்லாம் என்ன ஆயிற்று? சென்னை மாநகராட்சி தூங்கிவிட்டது. முதலமைச்சர் தொகுதியே நீந்தி செல்ல வேண்டிய நிலைமையில் உள்ளது. சென்னையை விட சென்னை புறநகர் மிக மோசமான நிலையில் உள்ளது. அமைச்சர்கள் சொல்லும் பொய்யை போல யாரும் சொல்ல முடியாது. இப்படி பொய் பேசுகிறோமே மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் கூட இல்லை" எனக் கூறியுள்ளார்.

மேலும், "4000 கோடி செலவு செய்ததற்கு 400 படகு வாங்கி கொடுத்திருந்தாலும் மக்கள் பயனடைந்திருப்பர். நிர்வாக திறமை இல்லாத அரசாக திமுக அரசு உள்ளது" எனக் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com