புதுக்கோட்டையில் உள்ள ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலையைக் கொண்ட பெருங்காரையடி மீண்ட ஐயனார் கோயில் விரைவில் சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் கிராமத்தில் 36 அடி உயரமுடைய ஆசியாவிலேயே மிகப் பெரிய குதிரை சிலையைக் கொண்ட பெருங்காரையடி மீண்ட ஐயனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து வழிபட்டு சென்று வருகின்றனர்.
குறிப்பாக மாசி மகத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் திரண்டு குதிரை சிலைக்கு இராட்சத மாலைகளை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துவது தான் மாவட்டத்திலேயே பெரிய திருவிழாவாக விளங்கி வருகிறது. இந்த கோவிலை சுற்றுலாத் தலமாக மாற்ற கோரி 15 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் குளமங்கலத்தில் புதிய பொது வினியோக அங்காடி கட்டிடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், ஐயனார் கோவில் விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்படும் என்றும், கோவிலுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்த அறநிலையத்துறை அமைச்சர் விரைவில் கோயிலுக்கு வருகை தர இருப்பதாகவும் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.