திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில், அதிக தொகைக்கு நடைபெற்றுள்ள பத்திரப்பதிவு நடைபெற்றதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில், நாள்தோறும் 100 கணக்கான பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று திடீரென 3 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று பத்திரபதிவிற்காக கொண்டு வரப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அண்மையில் நடைபெற்று முடிந்த பத்திரப்பதிவுகள் தொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கோடி கணக்கிலான பல இடங்கள் பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ள நிலையில், அது தொடர்பான ஆவணங்களையும், பத்திரப்பதிவு செய்தவர்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
பத்திரப்பதிவு செய்தவர்கள் விவரங்களையும் வருமானவரித்துறை அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் சோதனை காரணமாக செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதற்கிடையில் காலையில் இருந்து பத்திரப்பதிவு செய்ய வந்த தற்போது டோக்கன் முறையில் உள்ளே அனுமதிக்கப்பட்டு பத்திரப்பதிவானது பொது மக்களுக்கு எந்த இடையூறு இல்லாமல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்று வரும் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்ற பட வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆவணங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.