போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவது அரசின் கடமை என தேமுதிக பொருளாளா் பிரேமலதா கருத்து தொிவித்துள்ளாா்.
திண்டுக்கல்லில் நடைபெறும் கட்சி விழாவில் பங்கேற்பதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளா்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி இருப்பதாக குறிப்பிட்டவர், போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவது அரசின் கடமை எனவும் தொிவித்துள்ளாா்.
தொடா்ந்து பேசிய பிரேமலதா, மு.க.ஸ்டாலினும், கனிமொழியும் மதுக்கடைகளை ஒழிப்போம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு, தற்போது கனிமொழி அதனை மறுத்து வருவதாக குற்றம் சாட்டினார்.
இதனைத்தொடர்ந்து, முதலமைச்சரின் சிங்கப்பூர் பயணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரேமலதா, முதலமைச்சர் கோடைக்காலம் என்பதால் சுற்றுலா சென்றுள்ள நிலையில், தொழில் முனைவோர்களை ஈர்ப்பதற்காக சென்றிருப்பதாக கூறுகின்றனர். இதற்கு முன்பு துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு சென்ற முதலமைச்சரால், என்ன தொழில் துவங்கப்பட்டது, எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது என்று சரமாரி கேள்விகளை எழுப்பினார்.