கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி கர்நாடக மாநிலத்துக்கு வந்த பிரதமர் மோடி அவர்கள், இலவசங்களுக்கு எதிராக சிம்மக்குரல் கொண்டு சீறி இருக்கிறார். இலவசங்கள்தான் மாநிலங்களைக் கடனில் மூழ்கடித்து விடுகிறதாம். சொல்கிறார் பிரதமர்.
‘‘இந்தியாவை முன்னேற்ற வேண்டுமானால், இலவசக் கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும். சில இலவசங்களைக் கொடுத்து மக்களை முட்டாள்களாக்க சில அரசியல் கட்சிகள் கருதலாம். ஆனால் உங்கள் எதிர்காலம் மட்டுமல்லாது, எதிர்காலத் தலைமுறையையும் சிந்தித்துக் கடமையாற்றும்படி இளைஞர்களைக் கேட்டுக் கொள்கிறேன். கவர்ச்சிகரமான இலவசங்களை வழங்கும் அரசியலுக்காக பெரும்பாலான மாநில அரசுகள் தங்கள் நிதி ஆதாரத்தில் பெரும்பகுதியைச் செலவிடுகின்றன. இது எதிர்காலத் தலைமுறைக்கான வளங்களைக் காலி செய்துவிடும். நிகழ்காலத்தைப்போல எதிர்காலத்தைப் பற்றியும் அரசுகள் சிந்திக்க வேண்டும்” என்று பிரதமர் பேசி இருக்கிறார். இது ஏப்ரல்அடுத்த மூன்று நாட்களில் மே1 ஆம் நாள் கர்நாடக பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது. பிரதமரின் சிந்தனைப்படிதானே அந்த அறிக்கை அமைந்திருக்க வேண்டும். அதுதான் இல்லை. முற்றிலும் மாறாக இலவசங்களை அள்ளி இறைத்திருக்கிறது பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை.
ஏழைக் குடும்பங்களுக்கு தினமும் அரை லிட்டர் பால்
ஆண்டுக்கு 3 சமையல் கியாஸ் சிலிண்டர் இலவசம்
5 கிலோ சிறுதானியங்கள் இலவசம்
அடல் ஆகாரகேந்திரா சார்பில் குறைந்த விலையில் உணவு.
படித்த இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை
மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை - என்று அறிவித்துள்ளது கர்நாடக பா.ஜ.க.
இலவசங்களை மூன்று நாட்களுக்கு முன்னால் கண்டிக்கிறார் பிரதமர். அதை மீறி இலவசங்களாக அறிவிக்கிறது கர்நாடக பா.ஜ.க. அப்படியானால் கர்நாடக பா.ஜ.க., பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் இல்லையா?
இலவசங்களை விமர்சிப்பதன் மூலமாக பெரிய மகுடத்தை தனக்குத் தானே சூட்டிக் கொள்கிறார் பிரதமர். ஆனால் அது நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுகிறதா என்றால் இல்லை.
“இலவசங்களை விமர்சிப்பதால் பெரிய மகுடத்தை தனக்குத் தானே சூட்டிக் கொள்கிறார் பிரதமர்..” முரசொலி விமர்சனம் !
கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அப்போது பா.ஜ.க. அளித்த வாக்குறுதி என்ன? ‘Agresar Gujarat Sankalp Patra 2022’ எனப்படும் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இருந்தது பெரும்பாலும் இலவச வாக்குறுதிகள்தான். இதோ அவர்களது இலவச வாக்குறுதிகள்...
அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கே.ஜி. முதல் பி.ஜி. வரை இலவசக் கல்வி.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர்.
9 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்.
பெண்களுக்கு ஆண்டுதோறும் 2 சமையல் காஸ் சிலிண்டர்கள்
பொது விநியோகத் திட்டத்தில் மாதத்துக்கு ஒரு கிலோ பருப்பு இலவசம்
ஆண்டுக்கு 4 முறை ஒரு கிலோ சமையல் எண்ணெய் இலவசம்
இலவச சானிட்டரி நாப்கின்கள்
மகப்பேறுத் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள்.
மாநிலம் முழுவதும் 100 இடங்களில் அன்னதான உணவகங்கள்
அன்னதான உணவகங்களில் 5 ரூபாய்க்கு சாப்பாடு
உயர் வகுப்பு ஏழைகளுக்கு ஏராளமான சலுகைகள்
உயர்வகுப்பு ஏழைகளுக்கு இலவச நோயறிதல் சோதனைகள்.
- இவைதான் குஜராத் பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகள் ஆகும். வாக்குறுதிகள் அல்ல, இலவசங்கள். இப்படி அறிவித்துத்தான் வென்றார்கள். அதையே கர்நாடகாவில் அமல்படுத்தத் துடிக்கிறார்கள். ஆனால் இலவசங்களுக்கு எதிராக உபதேசம் செய்கிறார் பிரதமர்.
சமூக நலத் திட்டங்களுக்கும் - இலவசங்களுக்கும் வேறுபாடு இன்னமுமா தெரியவில்லை. ஒரு தனி மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கான தேவையை ஒரு அரசு வழங்கினால் அது சமூக நலத் திட்டம் ஆகும். இலவசம் எது, மக்கள் நலத்திட்டம் எது என்பது குறித்து உச்சநீதிமன்றமே விளக்கமளித்துள்ளது. இலவசங்களையும் வளர்ச்சித் திட்டங்களையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்றும் சொல்லி இருக்கிறது.
‘‘தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளைத் தடுக்க முடியாது. ஆனால் சரியான வாக்குறுதிகள் எது, பொதுப் பணத்தைச் செலவிடுவதற்கான சரியான வழி எது என்பது தான் எங்களது கேள்வி” என்று தலைமை நீதிபதி கூறியிருந்தார்.
‘‘விவசாயிகளுக்கு மின்சாரம், விதைகள், உரங்களுக்கு அளிக்கப் படும் மானியத்தை இலவசமாகக் கருதமுடியுமா? இலவச சுகாதாரச் சேவைகள், இலவச குடிநீர், நுகர்வோருக்கு இலவச மின்சாரம் ஆகியவற்றையும் இலவசமாகக் கருதமுடியுமா? இலவசப் பொருட்களையும் இலவசக் கல்விப் பயிற்சியையும் ஒப்பிடக்கூடாது. மக்களின் ஊதியம், வாய்ப்புகள் போன்றவற்றில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வுகளை ஈடுசெய்ய வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டமே சொல்கிறது” என்றும் நீதிபதிகள் கூறினார்கள். இவை எதையும் கருத்தில் கொள்ளாமல் பொத்தாம் பொதுவாகப் பேசி இருக்கிறார் பிரதமர்.
517 கார்ப்பரேட் நிறுவனங்களின் 5 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததை இலவசம் இல்லை என மோடி சொல்வாரா?