வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு தயாராக உள்ளதா..? என கமல்ஹாசன் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறு மழைக்கே பெரும்பாலான மாவட்டங்கள் தத்தளிக்கும் நிலையில், அக்டோபர் இறுதியில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை வழக்கத்தைக் காட்டிலும் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு தயாராக உள்ளதா? என மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல் ஹாசன் கேள்வி எழுப்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பிற்கு பிறகு வடகிழக்கு பருவமழை மக்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தற்போதும் கூட ஒரு மணி நேர மழைக்கே சென்னை நிலைகுலைந்துபோகிறது. பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க: "திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்" புத்தகம் வெளியீடு!
அதுமட்டுமல்லாமல், “ஸ்மார்ட் சிட்டி” என்ற பெயரில் பல்லாயிரம் கோடி செலவளித்தும், சிறிய மழையின் பாதிப்பைத் கூட தடுக்க முடியவில்லை என்றும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் சேதமடைந்தும், தூர்ந்து போயுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ள சூழலில், வடகிழக்குப் பருவமழை வலுத்துப் பெய்யும் போது நேரிடும் பேரிடர்களை தமிழக அரசு எப்படி கையாளப் போகிறது? என்று திமுக அரசை கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, வெள்ளம் சூழ்ந்த பிறகு நிவாரணம் வழங்குவது தீர்வாகாது எனவும், மாநிலம் முழுவதும் உள்ள மழைநீர் வடிகால்களை சீரமைத்து, மழை வெள்ளம் தங்கு தடையின்றி பயணிக்க நடவடிக்கை எடுப்பதே நிரந்தர தீர்வாகும். எனவே, அதற்கான பணிகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.