தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், முன்னணி தொழில் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து வருகிறார். இதுவரை ட்ரில்லியன்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் பல கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புாிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்ய ஜேபில் நிறுவனத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, திருச்சியில் அமையவுள்ள ஜேபில் நிறுவன தொழிற்சாலை மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜேபில் நிறுவனம் சிஸ்கோ, ஆப்பிள், ஹெச்.பி. உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், காஞ்சிபுரத்தில் ராக்வெல் தானியங்கி நிறுவனம் 666 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் 365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்க ஆட்டோ டெஸ்க் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக முக்கிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா். மேலும் திருச்சியில் 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் பெருமிதம் தொிவித்துள்ளாா்.