வட இந்தியர்களின் ஆக்கிரமிப்பு: முதலீட்டு வடிவில் தமிழ்நாட்டில் வருகிறது - தொல். திருமாவளவன்
இமானுவேல் சேகரன் படத்திறப்பு நினைவேந்தல்
இமானுவேல் சேகரன் பேரவை பொதுச் செயலாளர் சந்திரபோஸ் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஐந்திணை மக்கள் கட்சி சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு சந்திரபோஸின் திரைப்படத்தை திறந்து வைத்தார்.
திமுகவை வெற்றி பெறச்செய்வதே மக்களின் லட்சியம்
படத்திறப்பு மற்றும் நினைவேந்தலில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன் பேசுகையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் சாதிவாதத்திற்கு, மதவாதத்திற்கும் மக்கள் பாடம் புகட்டி இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி தொடர வேண்டும் என்று அங்கீகாரம் வழங்கிய தீர்ப்பாக தான் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் வெற்றி உள்ளது. வாக்குகளை விலைக்கு வாங்கி விட்டார்கள் என்று விமர்சனம் செய்கிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டிருந்தாலும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை இரட்டை இலை பெற்றுள்ளது. பணம் கொடுத்தாலும் அதிமுகவிற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் மக்கள் வாக்களித்துள்ளனர். அதேபோல் பணம் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் திமுகவிற்கும் மக்கள் வாக்களித்துள்ளனர். திமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற உணர்வோடு தான் திமுக கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு லட்சத்திற்கும் மேலான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மக்களை கொச்சை படுத்தக்கூடாது
திமுகவை விமர்சிக்கிறோம் அல்லது காங்கிரஸை விமர்சிக்கிறோம் என்ற பெயரால் வாக்களித்த மக்களை அவமதிக்கக் கூடாது. பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தவர்கள் என்று மக்களை கொச்சைப்படுத்த கூடாது. எந்த பொருள் கொடுத்தாலும் இரட்டை இலைக்கு வாக்களிப்போம் என்ற உறுதி இருந்ததோ, அதேபோல் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற உறுதியோடு முடிவெடுத்து தான் மக்கள் வாக்களித்துள்ளனர். திமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்கள் எல்லாம் ஏமாளிகளோ, பணத்தால் மயங்கி விட்டார்களோ, விலை போய் விட்டார்களோ என அர்த்தம் இல்லை. இரட்டை இலைக்கு மற்றும் நாம் தமிழருக்கு வாக்களித்தவர்கள் எதுவுமே வாங்காமல் வாக்களித்தார்கள் என கூறக்கூடாது. மக்கள் உறுதியாக நின்று தான் திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். எனவே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயகனே வென்றுள்ளது.
வட இந்தியர்களின் ஆக்கிரமிப்பு முதலீட்டு வடிவில் தமிழ்நாட்டில் வருகிறது
வடமாநிலத்தவர்கள் குறித்து பீகார் சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்று உள்ளது. தமிழர்களை பாதுகாக்க வேண்டும், தமிழர்களுக்கான வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்கு மாற்று கருத்தும் இல்லை. ஆனால் முதலீடுகள் என்ற பெயரால் வட இந்தியர்கள் தமிழகத்தில் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். ஒப்பந்த பணி என்ற பெயரில் வட மாநிலத்தவர்களை தமிழகத்தில் ஈடுபடுத்துகிறார்கள். பெரிய பெரிய மால், வணிக வளாகங்கள் மிகப்பெரிய துறைமுகம் போன்ற ஒப்பந்த பணிகளை வட மாநிலத்தவர்கள் எடுக்கிறார்கள்.
வட இந்தியர்களின் ஆக்கிரமிப்பு முதலீட்டு வடிவில் தமிழ்நாட்டில் வருகிறது. கூலி வேலைக்கு வரும் வடமாநிலத்தவர்களை அடித்து விரட்டுவோம் என கூறுவது உண்மையான தமிழனாக இருக்க முடியாது. வேலை வாய்ப்பின்மையால் வட மாநில தொழிலாளர்கள் கூலி வேலைக்கு தமிழகம் வருகின்றனர் என்றால் அந்த வேலை வாய்ப்பின்மைக்கு பொறுப்பேற்க கூடியவர் பிரதமர் நரேந்திர மோடி. வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக போராடுவதை விட்டு விட்டு பிரதமர் மோடிக்கு எதிராக போராடுவது தான் சரியானதாக இருக்கும் எனக் கூறினார்