வீர வசனமெல்லாம் பேசினாரு ஸ்டாலின்... ஆனா ஒண்ணுமே நடக்கல!! நக்கலடிக்கும் செல்லூர் ராஜு
உள்ளாட்சி தேர்தல் வரைக்கும் தான் திமுக கூட்டணி நீடிக்கும். அதன்பிறகு எல்லோரும் பிரிந்து சென்று விடுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
தமிழகத்திற்கு ஏற்பட்ட எல்லா பாதிப்பும் திமுக ஆட்சியில் இருக்கும் போது நடந்தது. கச்சத்தீவு, ஸ்டெர்லைட், முல்லை பெரியாறு, காவிரி உள்ளிட்ட பல பிரச்சனைக்கும் காரணம் திமுக தான்.
அடிமை அரசு என்று விமர்சித்த ஸ்டாலின் டெல்லி சென்று என்ன சாதித்துள்ளார்? வீர வசனம் பேசிக்கொண்டு டெல்லி சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின் ஆனால் எதுவும் நடக்கவில்லை.
இன்று உரிமைக்கு குரல் கொடுப்போம் என்கிறார் ஸ்டாலின். ஆனால், அதிமுக மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து மத்திய அரசுடன் போராடி இருக்கிறது.
கோ பேக் மோடி என்று திமுக சொன்னாலும், அவரை மரியாதையுடன் நடத்தி இருக்கிறார் மோடி.
ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்றார். ஆனால், தற்போது நீட் தேர்வுக்கு தயாராக சொல்கின்றனர். மக்களிடம் பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி திமுக மட்டும் தான்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு அதிமுக ஆட்சியில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
புரட்சி தலைவர் இரட்டை வேடத்தில் நடித்த படங்கள் பெரிய வெற்றி. அதே போல இரண்டு தலைவர்கள் கீழ் அதிமுக வெற்றி நடை போடுகிறது. எனவே, அதிமுக கட்சிக்குள் பிளவுபடுத்தும் வேலைகளை பலரும் (சசிகலா) செய்து கொண்டிருக்கின்றார்கள்.
அதிமுக ஆட்சியில் பல மதுக்கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. ஆனால், திமுக எத்தனை கடைகளை அடைத்து உள்ளது?
உள்ளாட்சி தேர்தல் வரைக்கும் தான் திமுக கூட்டணி நீடிக்கும், அதன் பிறகு மதிமுக, கம்யூனிஸ்ட் எல்லோரும் பிரிந்து சென்று விடுவார்கள்.
சட்டசபையில் ஸ்டாலின் போல சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வந்து நாடகம் போட மாட்டோம். உண்மையாகவே எங்களுடைய எதிர்ப்புகளை ஆக்கப் பூர்வமாக சபைக்கு உள்ளே விவாதம் செய்வோம் என்றார்.