இலக்கியச் செழுமை மிக்க தமிழ் படைப்புகளை உலகம் எங்கும் கொண்டு சேர்க்கும் பணியை தமிழ்நாடு அரசு திறம்பட செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக..:
தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் கடந்த 16-ஆம் தேதி சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கியது. 30-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள் பங்கேற்ற இந்த கண்காட்சிக்காக 66 அரங்குகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்தன.
நிறைவு விழா:
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த 'சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி' நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மருத்துவ மாணவர்களுக்காக தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட பன்னாட்டு பதிப்பு நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார்.
பெருமிதம்:
பின்னர் பேசிய அவர், தொழில் வளர்ச்சி மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம் உலக அளவில் தமிழ்நாடு முத்திரை பதித்ததாக பெருமிதம் தெரிவித்தார். இலக்கிய செழுமை மிக்க நமது படைப்புகளை உலககெங்கும் கொண்டு சேர்க்கவும், உலக அளவில் சிறந்த அறிஞர்களின் படைப்புகளை தமிழில் கொண்டு வரும் பணியில் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக கூறினார். இதற்காக 3 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அப்போது கூறினார்.
மொழிப்பெயர்ப்பு:
முன்னதாக, தமிழ் மொழியில் இருந்து 60 நூல்கள் பிற இந்திய மொழிகளுக்கும், 90 நூல்கள் உலக மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. இதேபோல், 365 நூல்களை மொழிபெயர்ப்பு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கண்காட்சியில் கையெழுத்தாயின.
பங்கேற்றவர்கள்:
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: நாகலாந்து, திரிபுரா, மேகலாயா சட்டமன்ற தேர்தல் எப்போது?!!!