5 ஏவுகணைகளின் பெயரை கேட்டால் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பெருமை அனைவருக்கும் தெரியும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, என் மண், என் மக்கள் என்ற பெயரிலான பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரையை தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாதசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தேசத்தின் செழிப்பிற்காக பிரார்த்தனை செய்ததாக குறிப்பிட்ட அமித் ஷா, "ராமநாதசாமி கோயில் சனாத தர்மத்தின் தொன்மை மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடு" என தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏபி.ஜே. அப்துல் கலாமின் இல்லத்திற்கு சென்ற அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள புகைப்பட தொகுப்பு, ராக்கெட் தொழில்நுட்பம் மற்றும் புத்தகங்கள் அடங்கிய கண்காட்சியை ஆர்வமுடன் கண்டு களித்தார்.
இதனைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் ரெசிடென்சியில் அப்துல் கலாம் குடும்பத்தார் சார்பில் "கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை" என்ற புத்தகத்தினை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். அப்போது பேசிய அவர், 5 ஏவுகணைகளின் பெயரை கேட்டால் அப்துல் கலாமின் பெருமை அனைவருக்கும் தெரியும் என்றார்.
நிகழ்ச்சியில் கலாம் குடும்பத்தார் நஜிமா மரைக்காயர், அப்துல் கலாம் பேரன் சேக் சலிம், சேக் தாவுத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . இதன் பின்னர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் குடும்ப உறுப்பினர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.