75% வருகைப்பதிவு, ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 25 மதிப்பெண்கள், உடற்கல்வி பாடத்தையும் சேர்த்து மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு குறையாமல் மதிப்பெண் பெற்றால் தான் 9-ம் வகுப்பு தேர்ச்சி என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
2022 - 2023 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற 6 - 9 வகுப்பு வரை உள்ள மாணவர்களின் தேர்ச்சி சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் வழங்குதல் தொடர்பான அமர்வானது இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்ச்சி பதிவேடு மற்றும் தேர்ச்சி பதிவுத்தாள் தயாரிக்கும் போது பின்பற்ற வேண்டிய குறிப்புகள் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு 22 அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
அதில், "6 - 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்க வேண்டும் எனவும் 9 -ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தேர்ச்சி வழங்க அரசு விதிகளின் படி குறைந்தது 75 % வருகைப்பதிவு இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளதோடு ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 25 மதிப்பெண்கள் பெற்று, உடற்கல்வி பாடத்தையும் சேர்த்து மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு குறையாமல் மதிப்பெண் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு பாடத்திலேயும் 25 மதிப்பெண்ணுக்கு அதிகம் பெற்று, வருகை சதவீதம் 75% குறைவாக இருந்தால் மருத்துவ சான்றின் அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலரின் ஒப்புதலுடன் விதிகளுக்குட்பட்டு தேர்ச்சி வழங்கலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா... தொடரும் சோதனை!!