தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் இல்லை என்றால் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விடும் என சேலத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் கோட்டை மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கலைஞர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களையும், திமுகவின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணிகளையும் நினைவு கூர்ந்தார். மேலும் தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் இல்லை என்றால் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடும் என்ற அவர் ஐடி, சிபிஐ, இடி ஆகிய மூன்றையும் வைத்து எதிர்க்கட்சிகளை ஒழித்து விடலாம் என மோடி எண்ணுகிறார். ஆனால் பாஜகவிற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து விட்டதாகவும் இன்னும் 6 மாதம்தான் மோடியின் ஆட்சி இருக்கும், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைத்தவுடன் மோடிக்கு ஜன்னியே வந்துவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் இந்தியாவின் மூளையாக ஸ்டாலின் உள்ளார் என நாடு முழுவதும் பேசும் காலம் விரைவில் வரும் என்ற அவர் 2024ல் ஸ்டாலின் யாரை அடையாளம் காட்டுகிறாரோ அவர்தான் மத்தியில் ஆட்சி அமைக்கப் போகிறார் எனவும் தெரிவித்தார்.