சென்னை அரும்பாக்கத்தில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி குடியிருப்பு கட்டடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வடபழனியைச் சேர்ந்த ஜி.தேவா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவில் கட்டப்பட்டுள்ள 60 வீடுகளை கொண்ட 4 மாடி கட்டடத்திற்கு எவ்வித முறையான அனுமதியும், திட்ட அனுமதியும் வழங்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 2014ஆம் ஆண்டு தகவல்களை பெற்றதாக தெரிவித்துள்ளார்.
இந்த கட்டுமானத்தால், அருகில் வசிக்கக்கூடிய 106 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவதாகவும், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்திற்கு மனு அளித்ததாகவும், தன் மனு மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் மற்றும் கூடுதல் துணை ஆணையருக்கு உத்தரவிட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : மகளிர் உரிமை தொகை; 18 முதல் விண்ணப்பிக்கலாம்!
2015ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கட்டிடத்திற்கு சீல் வைக்கவும், இடிக்கவும் உத்தரவிட்ட நிலையில், தற்போது வரை இடிப்பதற்கான நடவடிக்கையை அரசு அதிகாரிகள் எடுக்கவில்லை என கூறியுள்ளார். அதிகாரிகளின் இந்த மெத்தனத்தால் சட்டவிரோத கட்டிடங்கள் காளான்களை போல பெருகி, சட்டத்தை மதிக்கும் குடிமக்களின் அமைதியான வாழ்க்கை பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
எனவே, அந்த சட்டவிரோத கட்டிடத்தை இடிக்கவோ அகற்றவோ சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடும்படி மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு மற்றும் வி.லெட்சுமி நாரயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் குறிப்பிடும் கட்டடத்தை வரன்முறை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரித்த மாநகராட்சி முடிவை சுட்டிக்காட்டி, அந்த கட்டடத்தை எட்டு வாரங்களில் இடிக்க வேண்டுமென சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை கூடுதல் ஆணையருக்கு உத்தரவிட்டனர்.