போக்குவரத்து கழக தொழிலாளர்களின் தீபாவளி போனஸில் தொழிற்சங்கங்களுக்கான தொகையை பிடித்தம் செய்ய தடை விதிக்க கோரி வழக்கில் தமிழக அரசும், போக்குவரத்து கழகங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கோவையை சேர்ந்த நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் சார்பில், அதன் பொதுச் செயலாளர் அன்புராஜ் தாக்கல் செய்துள்ள மனுவில், போக்குவரத்து கழங்கங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஒப்புதலுடன், மாதாந்திர ஊதியத்திலிருந்த சங்கத்தின் சந்தா தொகையை பிடித்தம் செய்யப்பட்டு, தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்படும் நடைமுறை அமலில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தீபாவளி பண்டிகையையொட்டி ஊழியர்களின் வருடாந்திர போனஸ் தொகையிலும் தொழிற்சங்கங்களுக்காக பணம் பிடித்தம் செய்யப்படுவதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே ஊழியர்களின் ஒப்புதல் இன்றி போனஸ் தொகையில் பிடித்தம் செய்ததற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி ஆர்.ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் R.Y.ஜார்ஜ் வில்லியம்ஸ், வருடாந்திர போனஸ் தொகையில் தொழிற்சங்கங்களுக்கு பணம் பிடித்தம் செய்யப்படுவதால், பண்டிகைக்காக கடன் வாங்க வேண்டிய நிலைக்கு மீண்டும் தள்ளப்படுவதாக வாதிட்டார்.
இதையடுத்து வழக்கு குறித்து தமிழக அரசும், போக்குவரத்து கழகங்களும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.