சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
சென்னை வேளச்சேரி, பிரதான சாலை, ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், பேருந்துகள் தாமதமாக வருவதால், பயணிகள் மழையில் நனைந்தபடி அவதிக்குள்ளாகினர். இருந்தபோதிலும், இந்த மழை, கோடை வெப்பத்தை தணித்துள்ளதால் பொதுமக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்த ஓடுகிறது. மேலும், முடிச்சூர் கங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து கிணற்றிற்குள் விழுந்தது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
இதேபோன்று, தாம்பரம், மேம்பாலம் இரும்புலியூர் சர்வீஸ் சாலையில் ஒரு அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். அப்பகுதியில் கழிவு நீர் தொட்டிக்குள் பிளாஸ்டிக் கவர்கள் தேங்கியுள்ளதால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனை சீர் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழை நீர் சூழ்ந்து ஏரி போல் காட்சி அளிக்கிறது. மேலும் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகினறனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உத்தரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி, பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பழைய ரயில் நிலையம் நுழைவாயிலில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகனம் ஓட்டிகளும் ரயில் பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, வெண்குன்றம் மாம்பட்டு, மருதாடுகாரம், கொசப்பட்டு, சத்யா நகர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பணிக்கு சொல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் அவதிக்குள்ளாகினர்.