மானாமதுரையில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
பண்டைய மக்களின் வாழ்வியல், தொழில், விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட ஆதாரங்கள் கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்டு, தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற 5 கட்ட அகழாய்வுகளில் கிடைத்த பொருட்களை எல்லாம் 2 ஏக்கர் பரப்பளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கடந்த மாதம் 5 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்பிறகு, தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வருகை புரிந்து அருங்காட்சியகத்தை நேரில் கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் அருங்காட்சியகத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த சிவப்பு நிற பானைகள், சாம்பல் நிற பானைகள், அணிகலன்கள், வரிவடிவ எழுத்துகள், தாழிகள் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு முடிவுகள் குறித்தும் தொல்லியல் துறை இணை இயக்குனர் (கீழடி பிரிவு) ரமேஷ், தொல்லியல் அலுவலர்கள் காவ்யா, அஜய் உள்ளிட்டோர் விளக்கமளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வாழ்வியலை அருங்காட்சியகம் பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.