தமிழகத்தில் வளர்ந்து வரும் நகரமான கிருஷ்ணகிரியில் தங்கும் விடுதிகள் இன்றி காவல் துறையினர் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களை தன்னகத்தே கொண்டதுதான் சூளகிரி பகுதி. சுமார் 25 கி.மீ. தூரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஒரு விபத்தோ, ஐந்துக்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்களோ நடந்து வருகிறது.
இதனால் இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தர்மபுரி, சேலம், நாமக்கல், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்கள் கிருஷ்ணகிரி சூளகிரி பகுதியில் வேலைக்கு அமர்த்தப்பட்டு வந்தாலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படவில்லை என்பதுதான் இன்று வரை தொடர்கதையாகி வருகிறது.
இந்த காவலர்களுக்காக ஏற்கெனவே கட்டப்பட்ட விடுதிகள் இருந்தும், அது அனைத்தும் பாழடைந்து இடிந்து விழும் தருவாயில் உள்ளது. பாம்பு தொல்லைகளும் கொசு தொல்லைகளும் பெருகி வருவதால் நிம்மதியாக உறங்குவதற்கே முடியாமல் அவதியுறும் போலீசார் தங்களுக்கு ஓரளவு வசதியுடன் ஒரு தங்கும் விடுதி அமையுமா என ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர்.
சூளகிரி பகுதியில் ஏராளமான வீடுகள் வாடகைக்கு விடப்பட்டு வந்தாலும், அது எதுவுமே போலீசாருக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. பொதுமக்களை பாதுகாப்பதற்கு போலீஸ் தேவை, நியாயம் கேட்பதற்கு காவல் நிலையம் தேவை, ஆனால் போலீசாருக்கு ஒரு வீடு கூட தருவதற்கு யாரும் இல்லையா? என வெம்புகின்றனர் போலீசார்.
சூளகிரி - பேரிகை சாலையில் உள்ள காவல் நிலையம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை அகற்றி விட்டு புதிதாக நவீன வசதிகளுடன் கட்டிடங்கள் அமைத்து கொடுத்தால் புண்ணியமாய் போகும் என கோரிக்கை விடுத்துள்ள இந்த களப்பணியாளர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்டுமா?
இதையும் படிக்க | 80 தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நிறுத்தி வைப்பு!