தமிழ்நாடு அரசிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேளுங்க...!ஆளுநருக்கு சீமான் கண்டனம்!

தமிழ்நாடு அரசிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேளுங்க...!ஆளுநருக்கு சீமான் கண்டனம்!
Published on
Updated on
1 min read

ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல் என சீமான் தெரிவித்துள்ளார். 

சீமான் அறிக்கை:

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்ததற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,
திராவிடம், திராவிடன், திராவிட ஆட்சி, திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளில் நாம் தமிழர் கட்சிக்குத் துளியளவும் உடன்பாடு இல்லையென்றாலும், திராவிடக் கொள்கையோடு, தமிழ்த்தேசியத்திற்கு எத்தனை முரண்கள் இருந்தாலும், எட்டுகோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு பரிந்துரைத்த வார்த்தைகளை, ஆளுநர் தனது உரையில் படிக்க மறுத்ததை ஒருபோதும் ஏற்க முடியாது. இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதலாகும்.

அவையின் மரபுகளை மீறிய ஆளுநர்:

மேலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் சட்டப்பேரவையில் உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே அவை மரபுகளை மீறி, பாதிலேயே ஆளுநர் வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும் அவமதித்துள்ளார். தமிழ்நாட்டு ஆளுநரின் இத்தகைய தரம் தாழ்ந்தப்போக்கினை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்:

மேலும், தமிழ் மண்ணிற்கும், மக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நியமனப் பொறுப்பாளரான ஆளுநர் தமது மலிவான நடவடிக்கையால் தமிழ்நாடு அரசினையும், மக்களாட்சி முறைமையினையும் மட்டும் அவமதிக்கவில்லை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமதித்துள்ளார். உடனடியாக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு அரசிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தனது அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com