சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பிரபல மாண்ட் ஃபோர்டு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மாண்ட்ஃபோர்டு பள்ளியில் கடந்த வாரம் காலை சுமார் 11 மணியளவில் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரெனே உள்ளே ஆயுதங்களுடன் அத்து மீறி நுழைந்துள்ளது. கையில் உருட்டுக் கட்டை போன்றவற்றோடு வெறியுடன் நுழைந்தவர்கள், அங்கிருந்த மாணவ மாணவிகளையும், பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்களையும் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து அறிந்த தலைமை ஆசிரியர் டோம்னிக் சேவியரிடம் புகார் அளித்தும் எந்த வித பதிலும் கிடைக்காமல் இருந்துள்ளது. அப்போது தான் இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணி விவரம் தெரியவந்து, அதிர்க்குள்ளாக்கியது.
சேலம் மாவட்டம் மாண்ட் ஃபோர்டு பள்ளியில் கேக் ஏலம் எடுப்பது வழக்கம். இவ்வாறு ஏலம் எடுக்கப்பட்ட கேக்குகளை ஏழை மாணவர்களுக்கு வழங்கி வந்தனர். அந்த வகையில் கடந்த வாரம் பள்ளியில் ஏலம் எடுக்கும் நிகழ்வின்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் இடையே தகராறு எழுந்தது.
இதில் பத்தாம் வகுப்பைச் சேர்ந்த ரித்தீஷ் என்ற மாணவர் சக மாணவர்களை திரட்டிக் கொண்டு கலாட்டாவில் ஈடுபட்டதோடு, திருநெல்வேலியில் உள்ள தனது அண்ணன்களையும் போன் போட்டு வரவழைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ரித்தீஷின் அண்ணன்கள் மாணிக்கம் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் சேர்ந்து தலைமை ஆசிரியர் டோம்னிக் சேவியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாணவர்களிடையே கலகத்தை உண்டாக்கி தகராறில் ஈடுபட்ட ரித்திஷை, ஒழுங்கு நடவடிக்கையின் மூலம் பள்ளியை விட்டு வெளியேற்றினார் டோம்னிக் சேவியர்.
தனது தம்பியை நீக்கம் செய்ததால் ஆத்திரமடைந்த கார்த்திக் ராஜா மற்றும் மாணிக்கம் ராஜா ஆகியோர், படையுடன் சென்று, மாணவர்களையும், ஆசிரியர்களையும் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர்.
இந்த விசாரணையில் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக உள்ள அ.ம.மு.க.வைச் சேர்ந்த மாணிக்கம் ராஜாவின் பேரன்கள் தான் ரகளையில் ஈடுபட்டடனர் என்ற விவரம் தெரியவந்தது. கட்சி பின்னணி என்பதால் பள்ளி நிர்வாகத்தினர், புகார் அளிப்பதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
நாங்குநேரியில், பள்ளி மாணவர் தாக்கப்பட்ட கொடூர சம்பவத்தின் அதிர்ச்சி அலைகள் நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில், மாண்ட்ஃபோர்டு பள்ளி நிர்வாகமும் காவல்துறையும் இதில் தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டு, மாணவர்கள் மத்தியில் சுமூக சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.