முன்னாள் முதல்வரின் நினைவு நாள்.. கழக தலைவர்கள் உறுதிமொழி ஏற்பு..!

முன்னாள் முதல்வரின் நினைவு நாள்.. கழக தலைவர்கள் உறுதிமொழி ஏற்பு..!
Published on
Updated on
1 min read

பிரபலங்கள் மரியாதை

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று. கடந்த 2016 டிசம்பர் 5ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமான ஜெயலலிதாவிற்கு அதிமுகவை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் தொண்டர்கள் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ஈ.பி.எஸ் அஞ்சலி 

ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி அவரது நினைவு இடத்தில் அதிமுகவின் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் துவக்கி வைத்த மாபெரும் மக்கள் பேரியக்கமான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை நம் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா தன் வாழ்வின் உயிர் மூச்சாக கொண்டு, எனக்கென்ற தனிப்பட்ட வாழ்வில்லை, எனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்பில்லை, நான் வாழ்வதே இந்த இயக்கத்திற்காக தான், தமிழக மக்களுக்காக தான், ஒவ்வொரு நொடி பொழுதும் இந்த இயக்கத்தை பற்றியும், தமிழ்நாட்டு மக்களை பற்றியும் சிந்தித்து கொண்டிருந்தவர்.

உண்மையான அன்பு, அயராத உழைப்பு,வல்லமைமிக்க செயல்கள்,மக்கள் நலன் சார்ந்த சிந்தனைகள் என வாழ்நாளெல்லாம் மக்களுக்காகவே வாழ்ந்து, தமிழக மக்களின் வாழ்வில் வசந்தத்தை தந்த மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவுநாளில் அவர் எண்ணிய சிந்தனையை செயல்படுத்த உறுதியேற்போம் என்று ஈ.பி.எஸ் தெரிவித்தார்.

ஓ.பி.எஸ் உறுதிமொழி

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஓ.பன்னீர்செல்வம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் தூவி மரியாதை செய்த பின்னர், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து ஏற்ற உறுதிமொழி பின்வருமாறு.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கழக உடன்பிறப்புகள் உறுதிமொழியேற்பு.

அதிமுக என்னும் பேரியக்கத்தை தோற்றுவித்த புரட்சி தலைவரும் , அதனை முக்கடலும் சூழ்ந்த பாரதத்தில் மூன்றாம் பெரும் இயக்கமாக வளர்த்துக் காட்டியவர் புரட்சி தலைவி அம்மாவும், இயக்கத்தின் இதயமாக கருதியது, கழகமே உலகமென வாழும் தொண்டர்களை தான். அப்படிப்பட்ட தொண்டர்களின் கருத்துகளுக்கு அந்த மாபெரும் தலைவர்களால் தரப்பட்ட மதிப்பும், முக்கியத்துவமும் இன்று சிலரால் திட்டமிட்டு பறிக்க முயல்வதை தொண்டர்களின் துணையோடு முறியடித்து அனைத்து இந்திய  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்கின்ற அப்பழுக்கில்லா இயக்கத்தை மிடுக்கு குறையாத, எஃகு கோட்டையாக தொடர்ந்து கொண்டு சென்றிட இந்த தியாக திருநாளில் உளமார உறுதியேற்கிறோம்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com