சங்கராபுரம் அருகே கல்வராயன் மலைப்பகுதியில் அப்பாவி மலைவாழ் மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யும் வனத்துறை அதிகாரியை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கல்வராயன்மலை பகுதியில் சுமார் 75 மலை கிராமங்கள் உள்ளன. இந்த நிலையில் வெள்ளிமலை சோதனைசாவடியில் பழங்குடி இன மக்களுக்கு எதிராக பொய் வழக்கு போடும் வனத்துறை அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து வெள்ளிமலை, கருமந்துறை சாலையில் தரையில் அமர்ந்து அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில் தாழ்தொரடிப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெள்ளி மகன் ஆண்டி என்பவர் மீது வழக்கு போடுவோம் என சிறைபிடித்து வைத்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருவாய்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு ஆண்டி என்பவரை விடுவித்த பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.