சென்னை முட்டுக்காடு படகு குழாமில் மிதவை உணவக கப்பல் அமைக்கும் பணி 50 சதவீதம் முடிவடைந்த நிலையில், விரைவில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் கா. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், சென்னை அடுத்த கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமான இயந்திர படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தர வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த படகு இல்லத்தில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் பயணம் தொடங்கப்பட உள்ளது.
இத்திட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொது பங்களிப்பு மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக மிதவை உணவக கப்பல் (Floating Restaurant) அமைக்கப்படுகிறது. இந்த மிதக்கும் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.
முதல் தளம் திறந்த வெளி தளமாகவும், சுற்றுலா பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கப்பலில் சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை (மோட்டார் இன்ஜின்) அமைக்கப்பட உள்ளது.
இந்த கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இரண்டு அடுக்கு உணவக பயணக் கப்பல் நீளம் 125 அடியும் அகலம் 25 அடியும் கொண்ட இந்த கப்பலை ஆய்வு மேற்கொண்ட பின்னர்
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராமசந்திரன்:-
"மிதவை கப்பல் கட்டமைப்பு இதுவரை 50 சதவீத பணிகள் தரமாகவும், பாதுகாப்பான முறையில் பணிகள் நடைபெறுகிறது, இன்னும் 40 நாட்களில் முழுவதுமாக பணிகள் முடிவுற்று சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்", என தெரிவித்தார்.
மேலும் இத்திட்டத்தினை தமிழகத்தில் கோயம்புத்தூர், ஊட்டி உள்ளிட்ட நான்கு இடங்களில் விரிவு படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் உள்ள 9 படகு குழாமில் கடந்த ஆண்டை விட அதிகளவில் சுற்றுலாத்துறையில் இந்த ஆண்டு வருகை புரிந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிக்க | ஈழத்தமிழர்களிடம் சீமான் பணமோசடி - வீரலட்சுமி குற்றச்சாட்டு