கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நிலக்கடலை மற்றும் கேழ்வரகு சாகுபடிக்காக நிலத்தை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் களமிறங்கி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமும் மற்றும் கால்நடைகள் வளர்ப்பும் பிராதன தொழிலாக உள்ளது. நீர்பாசன வசதி உள்ளவர்கள் ரோஜா,சாமந்தி உள்ளிட்ட மலர் சாகுபடிகளிலும் அதே போல் தக்காளி,பீன்ஸ், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளிலும் சாகுபடி செய்கின்றனர்.
ஆனால் நீர்பாசன வசதி இல்லாத தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட சுமார் 100 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதால், நிலக்கடலை, கேழ்வரகு, எள்ளு உள்ளிட்ட சிறு தானியங்களை மழையை மட்டுமே நம்பி விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். பெரும்பாலும் இந்த பகுதி மேட்டுப்பகுதி என்பதால் நீர் பாசனத்திற்கு பருவ மழையை மட்டுமே நம்ப வேண்டியுள்ளது.
இந்நிலையில் தற்போது சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை விவசாயிகள் உழுது உரமிட்டு விதைப்பதற்காக தயார் நிலையில் வானம் பார்த்த பூமியாக பருவ மழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கின்றனர். எனவே, வானம் பார்த்த பூமிக்கு, வானம் மழை தந்தால் மட்டுமே பூமி வளமடையும் என்பதே நிதர்சனம்.