போலியாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள்..... நீதிமன்றம் தீர்ப்பு என்ன?!!

போலியாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள்..... நீதிமன்றம் தீர்ப்பு என்ன?!!
Published on
Updated on
1 min read

உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், போலியாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

ரத்து செய்ய புகார்:

செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த 2000ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட ஒன்பது பத்திரங்களை போலியானவை என அறிவித்து, அவற்றை ரத்து செய்யக் கோரி நடேசன் என்பவர், மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்தார்.

நேரில் ஆஜராக:

அதன் அடிப்படையில் இந்த ஆவணங்கள் உண்மையானவை என ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி ஹரிநாத் என்பவருக்கு, மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பினார்.

கோரிக்கை:

இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி ஹரிநாத் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலி ஆவணங்கள் எனக் கூறி அதை ரத்து செய்யக் கோரி நடேசன் தாக்கல் செய்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மோசடி ஆவணங்கள்:

அரசு தரப்பில் ஆவணங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என விசாரிக்க மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் உள்ளதாகவும், அந்த அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியதில் எந்த சட்டவிரோதமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

பறிக்க முடியாது:

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாலும், மோசடி ஆவணங்கள் குறித்து  மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கும் உரிமையை பறிக்க முடியாது என தெளிவுபடுத்தினார்.

விளக்கமளிக்க:

மேலும், இந்த வழக்கில் மாவட்ட பதிவாளரின் நோட்டீசுக்கு இரண்டு வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இருதரப்பினரின் கருத்துக்களை கேட்டு 12 வாரங்களில் புகார் மீது சட்டப்படி முடிவெடுக்க வேண்டும் என மாவட்ட பதிவாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com