கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளவான 84 அடியில் 83.43 அடி வரை நிரம்பி உள்ளது.கிருஷ்ணராஜ சாகர் அணை தனது முழு கொள்ளளவான 124.80 அடியில் 106 அடியை எட்டி உள்ளது.
இந்த நிலையில் பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 556 கன அடி உபரி நீரும் என மொத்தம் 25 ஆயிரத்து 556 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், மெயின் அருவி ,ஐந்தருவி, சிறிய அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
காவிரி ஆற்றிற்கு வரும் நீர் வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நேற்று மாலை முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து காணப்படுவதால் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளின் அருகில் செல்லவோ,குளிக்கவோ வேண்டாம் என மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.