சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தடுப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.அதைத் தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார்.
அதன் பின்செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில் தமிழகத்தில் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். மேலும் தமிழகத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் வழங்க பிரதமரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளேன் எனவும் தெரிவித்தார்.
அதோடு தான் முதல்வராக இருந்த போது எவ்வளவு ஆக்சிஜன் படுக்கைகள் இருந்ததோ இப்போதும் அதே படுக்கை வசதிகள்தான் உள்ளது; இதை அரசு அதிகரிக்கவே இல்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் தான் முதல்வராக இருந்தபோது நாள்தோறும் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு கொரோனா பரவல் கட்டுபடுத்தப்பட்டது என்றும், இதனை கடைப்பிடித்தாலேயே தற்போதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் 32 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கை வசதியை தான் முதல்வராக இருந்த போது ஏற்படுத்தி தந்துள்ளேன் என்றும், தேர்தல் அறிவிப்பின் போதுகூட கொரோனா பரவலை கட்டுபடுத்த தேர்தல் ஆணையம் வாயிலாக நடவடிக்கை எடுத்தேன் என்றும் புதிதாக அமைந்துள்ள அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சமூக பரவலை கட்டுபடுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.