ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சென்னையில் மிக முக்கியமான மருத்துவமனையாகும். இங்கு தினமும் ஏராளமானோர் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
அதேபோல் நூற்றுக் கணக்கானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் நோயாளிகள் பயன்பாட்டிற்காக மெட்ரோ தண்ணீர், குழாய் மூலம் நேரடியாக வருகிறது. ஒருசில நேரங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.
ஆனால், தண்ணீர் எடுக்கப்படும் அந்தக் கிணறு பராமரிப்பு ஏதுமின்றி பாழடைந்து, சுகாதாரமின்றி கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முறையாக மூடப்படாமல் உள்ள கிணற்றின் மேற்புறத்தில் உள்ள வலையில் இறந்த நிலையில் புறா மற்றும் கழிவு பொருட்களும் கிடந்தது. இந்நிலையில் இதுகுறித்து மாலை முரசு செய்தி தொலைக்காட்சியில் தகவல் வெளியான நிலையில், இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக, கிணற்றை சுத்தம் செய்து நடவடிக்கை மேற்கொண்டது.