''சீட்டாட்டத்தில் கூட, கலைஞரை யாராலும் ஏமாற்ற முடியாது''; பழைய நினைவுகளை பகிர்ந்த அமைச்சர் துரைமுருகன்!

''சீட்டாட்டத்தில் கூட, கலைஞரை யாராலும் ஏமாற்ற முடியாது''; பழைய நினைவுகளை பகிர்ந்த அமைச்சர் துரைமுருகன்!
Published on
Updated on
2 min read

சென்னையில் கலைஞரின் சாதனைகள் குறித்து நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர், முன்னாள் முதலமைச்சர் கருணாநதியுடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

சென்னை தென்மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் "கலைஞரோடு நான்" என்ற தலைப்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருடன் பயணித்தவர்கள், அவருடனான நினைவுகளையும், அவரின் சாதனைகளையும் பகிரும் நிகழ்ச்சி சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பங்கேற்று தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர். அப்பொழுது, விழாவில் பேசிய எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன், தன்னுடைய தந்தையார் காலத்தில் இருந்து கலைஞர் உடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன், "கழக குடும்ப உறுப்பினராக நான் எப்போதும் சொல்வேன், எங்களுடைய உடம்பில் ஓடுவது சிகப்பு இரத்தமல்ல, கருப்புசிவப்பு இரத்தம் தான். அழுத்தப்பட்ட இந்த சமூகத்தை மீட்டெடுத்து எழுச்சிபெற வைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அவரது பாதையில் நாம் பயணிக்க அத்தனை வலிமையையும் அவரே நமக்கு தந்துவிட்டு சென்றுள்ளார்" என்றார்.

அதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் பேசிய போது, "எழுத்தும் தெய்வம், எழுது கோலும் தெய்வம் என்று பாரதி சொல்லி இருப்பது குறித்து ஒருமுறை கலைஞரிடம் பேசிக்கொண்டிருந்தோம். உங்களுக்கும் அப்படித்தானே என்று அவரிடம் கேட்டதற்கு, இல்லை, எழுத்தும் எழுதுகோலும் எனக்கு son and daughter என்றார். எதிலும் நுட்பமாக பதில் சொல்பவர் தலைவர் கலைஞர்," என்றும், "ஒருமுறை அவரிடம், வள்ளுவர் கோட்டத்தை ஏன் நுங்கம்பாக்கத்தில் கட்டினீர்கள்? என்று கேட்டேன். அதற்கு, பனை ஓலையில் கள்ளுண்ணாமை பற்றி எழுதிய வள்ளுவருக்கு, நுங்கம்பாக்கத்தில் தானே கோட்டம் இருக்க வேண்டும் என்றார். அவரை நினைத்தாலே எனக்கு கண்களில் கண்ணீர் வந்துவிடும்" என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

மேலும், "ஒருமுறை அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது கலைஞர் எனக்கு தொலைபேசியில் அழைத்தார், துரைமுருகன் உடல்நிலை குறித்து கேட்டுவிட்டு சொன்னார், 'ரொம்பவும் பதற்றப்படுவான்யா துரைமுருகன், நான் வேண்டும் என்றால் அதே மருத்துவமனைக்கு வந்து அட்மிட் ஆகிவிடவா?' என்று கேட்டார். எவ்வளவு அக்கறை என்று பாருங்கள். தொண்டனுக்காக எதையும் செய்யும் துணிவு கலைஞருக்கு மட்டுமே உரித்தானது" என்றார்.

ஜெகத்ரட்சகனை தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் பேசிய போது, இது புதுமையான விழா, யாரும் இதுபோன்ற தலைப்பை போட்டதில்லை, அதற்கு நான் தான் காரணம். தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பார் என்று அவருக்கு மீண்டும் சீட் உறுதி, என்று தனது பேச்சை தொடங்கினார். "கருணாநிதி குறித்து எதைப்பற்றி பேசுவது என்பது தெரியவில்லை, அடிமுடி காணாத அருணாச்சிலேஸ்வர் அவர். கருணாநிதி என்ற இமயத்தின் இடிப்பில் 53 ஆண்டுகள் உட்கார்ந்து இருந்தேன். அவர் முதலமைச்சராக இருக்கும்போது, வீட்டில் இருந்து கிளம்பும்போது இலக்கியம் பேசுவார், கோபாலபுரத்தில் இருந்து கோட்டைக்கு போகும் போது இருக்கும் கலைஞர் வேறு குயின் மேரிஸ் கல்லூரி வரும் பொழுது அரசியல் பேசுவார், சென்னை பல்கலைக்கழகம் வரும் பொழுது அதிகார தோரணை வரும், கோட்டை சென்ற உடன் அப்புறம் என்னவென்று கேட்பார், அப்போது அவர் என்னிடம் சொல்வார் எங்கு எங்கு எப்படி இருக்கணும் என்று. ஒரு காலத்தில் அவருடன் நாங்கள் சீட்டு ஆடுவோம். அப்போது கலைஞரை யாராலும் ஏமாற்றவும் முடியாது; வீழ்த்தவும் முடியாது. அவருக்கு பணத்தை எண்ணத் தெரியாது. ஆனால் கணக்கு விஷயத்தில் கறாராக இருப்பார்" என பேசியுள்ளார்.

மேலும், "அரசியலில் ஒரு தொண்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் கலைஞர் தான் உதாரணம். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் கலைஞர் தான் உதாரணம். தன் வாழ்நாள் முழுவதும் அண்ணாவின் தொண்டனாக அவர் இருந்தார். அண்ணாவின் காலத்திற்கு பின், ஒரு நாளைக்கு 500 முறையாவது அண்ணாவின் பெயரை சொல்வார். அந்த அளவிற்கு அண்ணாவின் மீது பற்று கொண்டவர் கலைஞர். ஒவ்வொருமுறை அவர் கோட்டைக்கு போகும்போதும் தன்னிச்சையாக அவரது தலை அண்ணா நினைவிடம் நோக்கி திரும்பும். அவர் ஒரு நாளைக்கு 500 முறை அண்ணாவின் பெயரை சொன்னார் என்றால், நான் இன்றைக்கு கலைஞரின் பெயரை நான் 200 அல்லது 300 முறையாவது சொல்கிறேன்", என்று பெருமிதத்துடன் பேசியுள்ளார்.
 
மேலும், "கலைஞர் வழியில் இன்றைக்கு இயக்கத்தை நடத்துகிறார் தளபதி. இந்த இயக்கத்திற்கு அண்ணா, நாவலர், பேராசிரியர் அன்பழகனை அடுத்து 4வது பொதுச்செயலாளராக என்னை தளபதி நியமித்துள்ளார். என் வாழ்நாள் முழுவதும், என் மறைவு வரையில் இந்த இயக்கத்தில் தான் தொண்டற்றுவேன்" எனக் கூறி தனது உரையை முடித்துக்கொண்டார், அமைச்சர் துரைமுருகன்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com