"நாம் என்ன படையா எடுக்க முடியும், அல்லது நாம் தான் சென்று அணையை திறக்க முடியுமா?" அமைச்சர் துரைமுருகன்!

Published on
Updated on
1 min read

அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுப்பதாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "தற்போது 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எங்களுடைய வாதம் ஒன்றே ஒன்று தான். நாங்கள் அவர்களிடம் கேட்பது 12 ஆயிரம் கன அடி. ஆனால் அவர்கள் 5 ஆயிரம் தான் கொடுக்கிறார்கள். அது போதவில்லை. பயிர்கள் வாடுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "நமது முதலமைச்சர் நிலமை குறித்து அறிக்கை கொடுக்கிறார். அதற்கு செவி கொடுக்க மாட்டுகிறார்கள். காவேரி மேலாண்மை ஆணையம் சொல்வதையும் ஏற்க மாட்டோம் என போராடுகிறார்கள். கர்நாடக அணைகளில் தண்ணீர் கொடுக்க கூடிய அளவிற்கு நீர் உள்ளது. அதனை தரமாட்டோம் என்பது எந்த வகையிலும் நியாமில்லை" எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஆற்றில் இறுதி பகுதியில் உள்ளவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும். பக்கத்தில் வாழும் இரு மாநிலத்தவர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அங்கு தமிழர்கள் உள்ளனர். இங்கு கன்னடர்கள் உள்ளனர். நித்தம் நித்தம் போக்குவரத்து உள்ளது.இந்த மாதிரியான மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமை மிக முக்கியம். கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா முன் அனுபவம் கொண்டவர். உச்சநீதிமன்றம் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டு தண்ணீர் திறந்து வருகிறார்கள். அதற்கு நான் நன்றி சொல்வேன்" எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், "நாம் எல்லோரும் இந்தியர்கள் என்ற எண்ணம் இருக்க வேண்டும். கர்நாடக ஏதோ தனி நாடு என்பது போல செயல்படக்கூடாது. செய்தி ஊடகங்கள் மூலமாக அல்லது காவேரி நதி நீர் பங்கீடுக்கு என இரண்டு அமைப்புகள் உள்ள அவை மூலமாகவோ தான் வலியுறுத்தவும் முடியும், நாம் என்ன படையா எடுக்க முடியும் அல்லது நாம் தான் சென்று அணையை திறக்க முடியுமா? " எனவும் அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com