அரசு மருத்துவமனைகளில் திடீர் சோதனை மேற்கொண்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய மருத்துவ பணிகள் இயக்குனருக்கு அறிவுறுத்தவேண்டும் என தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா செம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோகிலா என்பவர் கடந்த 2019ம் ஆண்டு பிரசவத்துக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பின் போது சிறிய அளவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தையல் முறையாக போடாததால் உடல் உபாதையை சந்தித்ததால், தவறு செய்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன், பிரசவத்தின் போது மேற்கொண்ட அறுவை சிகிச்சையால் மிக சிக்கலான பிரச்சினையை மனுதாரர் சந்தித்துள்ளார். உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்காததது மத்திய அரசின் மருத்துவ வழிகாட்டுதல் விதிகளுக்கு முரணானது எனக் கூறி, மனுதாரருக்கு 5 லட்ச்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் அவ்வப்போது தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளில் திடீர் சோதனை மேற்கொண்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய மருத்துவ பணிகள் இயக்குனருக்கு தமிழக அரசு அறிவுறுத்தவேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.