தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து சிறப்பு முகாமில் அதிக அளவில் கூட்டம் ஏற்படுகிறது. இதனால் தடுப்பூசிகள் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்திற்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும் தமிழக அரசின் நேரடி கொள்முதல் செய்தும் 3 கோடியே 31 லட்சத்து 42 ஆயிரத்து 480 கோவிஷீல்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 3 கோடியே 28 லட்சத்தி 19 ஆயிரத்தி 859 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.
இந்த நிலையில் புனேவில் இருந்து சென்னை விமானத்தில் 75 பெட்டிகளில் 9 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. மாலை 4 மணிக்கு புனேவில் இருந்து வந்த விமானத்தில் 86 பெட்டிகளில் 10 லட்சத்து 22 ஆயிரத்து 80 கோவிஷில்டு தடுப்பூசிகள் வந்தன.
தமிழகத்திற்கு முதன் முறையாக ஒரே நாளில் வந்த 19 லட்சத்து 22 ஆயிரத்து 80 தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னை வந்த தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு உடனே பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.