கள்ளச்சாராய உயிரிழப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் மோகன், புதிதாக தோன்றிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை கள்ளச்சாராயம் மாவட்டமாக மாற்றியதுதான் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை என விமர்சித்தார்.
தமிழகத்தில் கள்ளச் சாராய சாவு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், அரசை முறையாக வழி நடத்த தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் கோரியும் தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊழல் முறைகேடுகளை தடுக்காத தமிழ்நாடு அரசை கண்டித்து மயிலாடுதுறையில் சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாரதி முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், போதை பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்து ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கண்டன முழக்கமிட்டனர்.
இதேபோல் திருத்தணியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ரமணா தலைமை தாங்கினார். இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு கள்ளச்சாராயம், கொலை, கொள்ளை உள்ளிட்டவற்றிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது பேசிய ரமணா, அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் வருமான வரிசோதனையின் போது திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று குற்றம்சாட்டினார்.