"நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும்"  -அண்ணாமலை!

Published on
Updated on
1 min read

"நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும்" என பாஜக தலைவர் அண்ணாமலை தனது நடைபயணத்தின் போது தெரிவித்துள்ளார். 

என் மண் என் மக்கள் நடைபயணத்தை நேற்று உதகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டார். சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் இருந்து துவங்கிய நடை பயணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஏடிசி திடல் முன்பு நிறைவடைந்தது.

இதனை அடுத்து பொதுமக்களிடையே உரையாற்றிய அண்ணாமலை, நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும் என ஆளும் கட்சியினர் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இதுநாள் வரை பழங்குடியினர் அந்தஸ்து கிடைக்காமல் படுகர் இன மக்கள் இருப்பதாகவும் பாஜக கண்டிப்பாக படுகர் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து பெற்றுத் தருவோம் என்றார்.

மேலும் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயிகள் விலை கிடைக்காமல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவதாகவும் இதற்கு எந்த தீர்வும் எடுக்காமல் தமிழக அரசு இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், உதகை நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் கடைகளை வைத்திருப்பவர்களுக்கு வாடகை பிரச்சினை இன்னும் தீர்த்து வைக்கப்படவில்லை எனவும், மார்க்கெட் கடைகளை காலி செய்ய சொன்னால் பாஜக வேடிக்கை பார்க்காது கூறிய அவர், பாஜக பெரும் போராட்டத்தில் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 

மேலும் நீலகிரி மாவட்ட மக்களின் பிரச்சினைகளை தற்போதுள்ள நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எதையும் கண்டுகொள்ளாமல் ஒரு சுற்றுலா பயணி போல் நீலகிரி மாவட்டத்திற்கு இரண்டு நாள் வந்துவிட்டு செல்வதாக அவர் தெரிவித்தார்.

மேலும் டைம் பத்திரிக்கை ஆய்வில் உலக அளவில் தன்னுடைய பதவியை துஷ்பிரயோகம் செய்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் ஆ ராசா என்று அவர் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், திமுக தீய சக்தியாக இருப்பதாகவும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுக அடியோடு சாய்த்து முடிக்க வேண்டும் எனவும் மக்களிடம் கேட்டுக்கொண்டார். பாஜகவை சேர்ந்த வேட்பாளரை வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் நேரடியாக நாடாளுமன்றத்தில் பிரச்சனைகளை கூறி மத்திய அரசின் நிதிகளை எளிதில் பெறலாம் எனவும்  கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com