திமுக எம்.பி. ஆ. ராசாவின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை..!

Published on
Updated on
1 min read

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அ.ராசாவின் 15 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

திமுகவை சேர்ந்த நிர்வாகியான ஆ.ராசா.  இவர் 2004 முதல் 2007-ம் ஆண்டு வரை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மத்திய அமைச்சராக இருந்தவர். தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற திமுக உறுப்பினராக இருக்கிறார்.

அ.ராசா அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தமது பதவியையும், அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக சிபிஐ குற்றம்சாட்டியது. இது தொடர்பாக கடந்த 2015 ம் ஆண்டில் வழக்குப்பதிவும் செய்தது.

இதனை தொடர்ந்து லஞ்சமாகப் பெற்ற பணத்தை ஆ.ராசா தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் தொடங்கிய பினாமி நிறுவனம் மூலம் வருமானமாக கணக்கு காட்டியதும் அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குபதிவு செய்து, விசாரணையை நடத்தியது. 

2004 முதல் 2007-ம் ஆண்டு வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது, குருகிராமில் உள்ள இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதிகளை ஆ.ராசா வழங்கியதும், அதற்காக அந்நிறுவனம் ஆ.ராசாவுக்கு லஞ்சமாக குறிப்பிட்ட தொகையை வழங்கியதும் விசாரணையில் தெரியவந்ததாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது.

 கோவையில் உள்ள ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை பினாமி பெயரில் அ.ராசா வாங்கி இருப்பது தெரியவந்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் அந்த  பினாமி சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்திருந்தது. 

இந்த நிலையில் கோவை ஷெல்ட்டர்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் உட்பட 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com