திமுகவில் உறுப்பினர் உரிமைச் சீட்டை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் ஒப்படைக்காத நிர்வாகிகள் மீது புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
திமுகவில் கடந்தாண்டு மாவட்ட செயலாளர், மாவட்ட துணை செயலாளர்கள், பொருளாளர் அவைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நடந்து முடிந்த 15 வது உட்கட்சி பொதுத் தேர்தலுக்கான உறுப்பினர் உரிமை சீட்டு பதிவு செய்த அனைவருக்கும் ஏற்கனவே திமுக தலைமை அலுவலகத்தால் உரிமை சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில இடங்களில் சில நிர்வாகிகள் இன்று வரை உரிமை சீட்டுகளை வழங்காதது தொடர்பாக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களிடம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது விவகாரத்தை தலைமை கழகத்தின் கவனத்திற்கு எடுத்து வந்துள்ள நிலையில், தலைமை அலுவலகத்திலிருந்து உறுப்பினர் உரிமைச் சீட்டினை பெற்ற நிர்வாகிகள் யாராக இருப்பினும் அவரவருக்கு உரிய உரிமைச் சீட்டினை ஒரு வார காலத்திற்குள் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவ்வாறு ஒப்படைக்கவில்லை என யார் மீதும் தலைமை அலுவலகத்திற்கு புகார் வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திமுக தலைமை எச்சரித்துள்ளது.