எல்லோருக்குமான வளர்ச்சி.... பெண்களை உள்ளடக்கிய வளர்ச்சி...!!

எல்லோருக்குமான வளர்ச்சி.... பெண்களை உள்ளடக்கிய வளர்ச்சி...!!
Published on
Updated on
1 min read

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் சர்வதேச மகளிர் தின விழா நடைப்பெற்றது.

பங்கேற்றோர்:

இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டி கவிதைப் போட்டி குழு நடனம் மற்றும் குழுப் பாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த மகளிர் தின விழாவில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முதல் கையெழுத்து:

திராவிட மாடல் அரசு என்பதை எல்லாருக்குமான வளர்ச்சியாக பெண்களையும் உள்ளடக்கியதுதான் என முதலமைச்சர் அனைத்து இடங்களிலும் குறிப்பிட்டு வருகிறார் எனவும் முதலமைச்சரின் முதல் கையெழுத்து மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்திற்கானது எனவும் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேசியுள்ளார்.  மானுட விடுதலைதான் பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகிய நால்வரின் கனவாக உள்ளது எனவும் இலவச பேருந்து திட்டம் மகளிர்க்கு பல்வேறு பயன்களை அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

சுய உதவிக்குழு:

மகளிர் சுய உதவிக்குழுக்கள் வெறும் கடன் வாங்கி கொடுக்கவும் அதனை அடைக்கவும் இருக்கும் அமைப்பாக இருக்க கூடாது எனவும் அதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம் எனவும் கூறியுள்ளார்.

100 சுய உதவி குழுக்களுக்கு உயரிய தொழில்நுட்பத்தில் உணவுப் பதப்படுத்துதல், பேக்கரி பயிற்சிகள் போன்ற தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன எனவும் அதற்கான உபகரணங்கள் பொது இடங்களில் வைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட உள்ளது எனக் கூறிய மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது எனவும் அந்தப் பொருட்கள் உயர்தொழில்நுட்பத்தில் தரமாக இருப்பதால் சந்தைப் படுத்துதலும் எளிது எனவும் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி:

அனைத்து பதின்ம வயது பெண் குழந்தைகளுக்கும் கர்ப்பப்பை புற்றுநோய்களை தடுக்கும் வகையில் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவித்த அவர் அதற்கான முன்னோட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது எனவும் ஜூன் மாதத்திற்குள் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது எனவும் கூறியுள்ளார்.  விடுதலையும், சுதந்திரத்தையும் முன்னிறுத்தும் அரசாகத்தான் திமுக அரசு செயல்படும் எனவும் இந்த திட்டங்கள் நின்று விடாமல் தொடர்ந்து செயல்படும் வகையில் இடைவெளிகள் கண்டறியப்பட்டு நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com