தமிழகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து இன்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் கோவை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
தமிழக அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
இச்சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் கமலஹாசன் முன்னிலை வகித்தார். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கலந்துகொண்டு வருவாய் துறையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்தும் தமிழக அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு வருவாய்த்துறை அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை
குறிப்பாக இந்த ஆர்ப்பாட்டத்தில் துறையூர் பச்சைமலை அடிவாரத்தில் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்திய ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் இது போன்ற குற்ற செயல்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவியை பறிக்கவும் வலியுறுத்தப்பட்டன. மேலும் தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு வருவாய்த்துறை அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது.அதேசமயம் சங்கத்தின் சார்பாக கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.